Thursday 5 September 2013

ஆசிரியர் தினம் -எனக்குத் தெரிந்த சரஸ்வதி டீச்சர்,எங்கள்  ஊரில் அப்போது 10ம் வகுப்பக்கு மேல் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் இல்லை ,பள்ளிக்கு வருவது ஒன்றும் மிக முக்கியமாக யாரும் அங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ,பள்ளி நேரம் துவங்கும் முன் சரசு டீச்சர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பார்த்து விட்டு குறித்துக் கொள்வார் ,யார் யார் வரவில்லை என்று,பிறகு அந்த பிள்ளைகளின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று ,பேசி பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வருவார்,பல சமயங்களில் பெற்றோரோடு சண்டை போட்டு அழைத்து வந்திருக்கிறார் ,பிறகு எல்லோரும் வந்த பிறகு சரியாக காலை கொடி வணக்கம் பாட வேண்டும் யார் யார் பாடுகிறார்கள் என்று  கவனிப்பார்,பாடவில்லை என்றால் அடுத்த நாள் அவர்கள் தான் எல்லோர் முன்னும் காலையில் பாடியாக வேண்டும்,இப்படித்தான் தமிழ்த்  தாய் வாழ்த்து,ஆத்திச்சூடி,திருக்குறள்,வாய்ப்பாடு என்று இன்றும் என்னால் மறக்காமல் சொல்ல முடிகிறது,ஒருமுறை ஒரு இரெண்டாம் வகுப்பு படிக்கும் பையனின் புத்தகப்பை பெரியதாக இருந்தது ,சரசு டீச்சர் சந்தேகம் வந்து அந்த பையை சோதித்த போது அதில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து விட்டார் ,பிறகு நேராக அந்த பையன் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் "நீ உன் தொழிலுக்காக பிள்ளையின மனதையும்,படிப்பையும் கெடுத்து விடாதே,நான் இந்த முறை போலீசில் சொல்லவில்லை,இனிமேல் பிள்ளையின் பையில் பார்த்தால் கண்டிப்பாக சொல்லிவிடுவேன் என்று மிரட்டி விட்டு வந்தார் ,இத்தனைக்கும் அவன் அப்பா பெரிய ரௌடி ,சரசு டீச்சர் யாருக்கும் எதற்காகவும் பயப் பட மாட்டார் ,"நம்மிடம் தப்பு இல்லாத போது,நாம் தவறு செய்யாத போது நாம் யாருக்கும் பயப் படக் கூடாது என்பது அவருடைய கொள்கை"அதை இறுதி வரை பின்பற்றினார்,மதிய உணவுப் பிரிவு,விளையாட்டு,டான்ஸ்,பாட்டு,மாநில அளவிலான  போட்டி என்று எந்த ஒரு பிரிவிற்கும் அவரை பணிக்கும் போதும் தயங்காமல்,செய்வார்,பிள்ளைகளை உற்சாகப் படுத்தி அவர் இருந்த வரை அவர் வேலை செய்த பள்ளி கண்டிப்பாக பரிசுகளை வென்றுவிடும்படி செய்தவர், முதல் முதலாக தமிழக அரசால் 'நல்லாசிரியர் விருது "அறிமுகப் படுத்திய போது இவருக்கும் கிடைத்தது ,இவர் மறைந்த பிறகு,இன்றும் ஊருக்கு செல்லும் போது,போலீசாக,மிலிடரி ஆபீசராக ,டீச்செராக ,தாதியாக,பஸ் நடத்துனராக,கணினித் துறையில் வேலை செய்பவர் ,வெளி நாட்டில் வேலை செய்பவர் என்று ஜாதி மதம் இனம் பாராது  பலரும்  என்னை அடையாளம் கண்டு கொண்டு சொல்வார்கள் "உங்கள் அம்மா சரசு டீச்சர் இல்லை என்றால்,நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்,அன்று அவர் என் வீட்டுக்கு வந்து என்னை அழ அழ பள்ளிக்கு அழைத்து வந்திருக்க வில்லை என்றால் இன்று என் நிலை என்ன ஆகியிருக்குமோ என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்,அன்று கஞ்சா விற்ற தகப்பனின் மகன் இன்று அதே ஊரில் ஒரு போலீஸ் அதிகாரி ,போன முறை கோவிலுக்கு சென்று இருந்த போது தானாக முன் வந்து அந்த அதிகாரி என்னிடம் சொன்னார்  அப்போது நான் நினைத்துக் கொண்டேன்  என் அம்மாவும் ஏதோ செய்து விட்டுப் போய் இருக்கிறார் என்று ...இன்றும் என் அம்மா போல் கோடி கோடியாய் நேர்மையான ஆசிரியர்கள் உண்டு ,ஒவ்வொரு ஆசிரியைகளும் ஆசிரியர்களும்,ஏதோ ஒரு வகையில் வழியில் யாரரவது ஒருவர் வாழ்விலாவது மாற்றம் செய்து விட்டும்,செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள் அவர்களால் முடிந்த வரையில் .......அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .... .....

No comments:

Post a Comment